சென்னை:சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் முரளி விஜய் (Murali vijay) அறிவித்துள்ளார். தமிழக வீரரான முரளி விஜய் கடந்த 2002-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை பேட்ஸ்மேனான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட், 17 ஒரு நாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள முரளி விஜய் 12 சதம், 15 அரை சதம் உள்பட 3 ஆயிரத்து 982 ரன்கள் அடித்துள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் 339 ரன்கள் அடித்துள்ள விஜய் ஒரு அரைசதமும் அடித்துள்ளார். மேலும் 9 டி20 போட்டிகளில் 169 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த முரளி விஜய் கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆயிரம் பந்துகளை அசால்ட்டாக நின்று விளையாடி ராகுல் டிராவிட்டை நினைவு கூர்ந்தார்.
கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய முரளி விஜய் அதன்பின் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் முரளி விஜய் பதிவிட்டுள்ளதாவது, "சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்பதை இந்த நாளில் மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் அறிவிக்கிறேன்.
2002 முதல் 2018 வரை வரையிலான ஆண்டுகள் என் வாழ்வில் சிறப்பாய் அமைந்தன. குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடியதை மிகப்பெரும் கவுரவமாக நான் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.