சென்னை: தமிழகத்தில் நீண்ட நாட்களாக ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் சட்டமன்ற மசோதா குறித்தும், கொள்கைகள் குறித்தும் தொடர்ந்து மோதல் போக்குவது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் ரவி நேற்று முன்தினம் தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில், "திராவிட மாடல் என்பது காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு திமுக கூட்டணியான கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி சிறிதும் அறியாத ஆளுநர் ரவிக்கு, அது குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி சர்ச்சை கருத்துகளை சொல்வதை தொழிலாகவே கொண்டுள்ளார். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் விஷத்தை கக்கியுள்ளார். திராவிட மாடல் என்பது செத்துப்போன வெற்றுக் கோஷம் என்றும் ஒரே பாரதம் கொள்கையை போன்றது அல்ல என்றும் பா.ஜ.க. தலைவராகவே மாறி உளறியிருக்கிறார்.