சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விஸ்வகர்மா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர். ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமா? ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு போராட்டமா? என்ற சூழல் ஏற்பட்டுள்ளது, ராஜாஜி கொண்டு வந்த குலகல்வி போன்ற ஒரு திட்டம் என அனைவரும் கூறினார்கள், ஒரு வழியில் அது உண்மை ஆனால் ராஜாஜி நேர்மையானவர், ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறியதும் ராஜினாமா செய்தார். ஆனால் மோடி பேசவும் மாட்டார், ராஜினாமாவும் செய்யமாட்டார். பெற்றோர்களுக்குக் குழந்தைகளுக்கு வார விடுமுறை நாட்களில் உதவி செய்ய வேண்டும் என ஓராண்டுக்கு முன்பு பேசினார். இதில் உள் நோக்கம் இருக்கிறது எனக் கூறினால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள், மக்கள் மத்தியில் உள்நோக்கத்தோடு செயல்படும் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீ கல்லூரிக்குப் போக வேண்டாம் எனக் கூறும் ஒரு திட்டம் இது அதை நோக்கி நகர்ந்துகொண்டு உள்ளனர். பெரிய ஆபத்துகளை நாம் சந்திக்க உள்ளோம். உதயநிதி பேசிய உரை டெல்லியை உலுக்கிக்கொண்டு உள்ளது. உதயநிதி மீது வழக்குகளை நீங்கள் போடுங்கள் லட்சக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காரணம் அவர் கூறிய அனைத்து கருத்துகளையும் நாங்கள் அப்படியே ஆதரிக்கிறோம். 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா என பெயர் மாற்றம் செய்வதை எதிர்த்தவர்கள் இன்று மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து ஆ.ராசா பேசுகையில், “சனதானமும் விஸ்வகர்மா திட்டமும் வெவ்வேறு இல்லை. உதயநிதி மென்மையாகதான் சொன்னார்; மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று மலேரியா, டெங்கு ஆகிய நோய்களுக்கு SOCIAL STIGMA இல்லை அதை அருவருப்பாக மக்கள் பார்க்க மாட்டார்கள், சனாதனத்தை பொறுத்தவரை தொழுநோய், HIV போல அவலமான ஒரு நோய். மோடி சனாதானத்தை கடை பிடியுங்கள் என கூறுகிறார், அவரே அதை கடைபிடிக்கவில்லை.
காரணம் ஒரு நல்ல இந்து கடல் கடந்து பயணம் செய்ய கூடாது, இவர்கள் வெளிநாட்டிற்கு மட்டுமே பயணம் செய்வார். யாரை வேண்டும் என்றாலும் கூட்டி வாருங்கள் சனாதானம் குறித்து பேச நான் தயாராக இருக்கிறேன். டெல்லியில் லட்சம் நபர்களை கூட கூட்டத்தை கூட்டுங்கள். என்னை பொறுத்தவரை உதயநிதி மென்மையாக பேசி உள்ளார், என்னை பொறுத்தவரை நான் அதிகமாக பேசுவேன்” என்றார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “சனாதனம் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இது மகிழ்சியை அளிக்கிறது, திறந்த வெளியில் இந்த விவாதம் இதுவரை நடைபெறவில்லை. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து இருப்பவர்கள் சன்பரிவார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் மிக பொறுப்புணர்வோடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருவதால் இந்த சூழல் கணிந்துள்ளது எனவே அவர்களுக்கு ஆத்திரம் திமுக மீது, திமுகவை விமர்சிப்பதை ஒரு வேலையாக பாஜகவினர் செய்து வருகின்றனர்.
திமுகவை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சித்தரிப்பது மூலம் இந்துக்களை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்கள். இது இந்துக்களை ஏமாற்றும் முயற்சி, 100 விழுக்காடு வாக்கு வங்கி அரசியலுக்கான வேலை திட்டம் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மக்கள் இந்து மக்கள்தான் வேறு யாரும் இல்லை. சனாதனம் தர்மம் வாழ்வியல் முறை என இட்டுக்கட்டி விளக்கம் தருகிறார்கள், இப்படி எங்கும் விளக்கம் இல்லை. சனாதனம் தர்மத்தில் சமத்துவம் இல்லை என எழுத்துக்கள் மூலம் இருக்கிறதா என கேட்கின்றனர்.