சென்னை: கோரமண்டல் விபத்துக்கும் அதில் பலியான உயிர்களுக்கும் ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பெடுத்துக் கொண்டு ஒரு வார காலத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோர் கூட்டாக இன்று(06.6.2023)செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசு அங்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அனுப்பி வைத்து, மக்கள் மத்தியில் மத அடிப்படையிலான பிரிவினை வாதத்தை ஏற்படுத்த பல்வேறு வழி வகைகளை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநர் தமிழகத்துக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழ் கலாச்சத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராகவும் கருத்துக்களை பேசி வருகிறார். முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு செல்வதால் அந்நிய முதலீடு வராது எனத் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஏற்பதற்கான கட்டமைப்பு இல்லை. அதை வலுப்படுத்த வேண்டும். உத்திரபிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து முதலீட்டை எதிர்பார்க்கின்றனர். ஆனால், நாம் வெளிநாட்டிற்கு சென்று அந்நிய முதலீட்டை ஈர்த்து வருகின்றோம். நம்மிடம் இருப்பது மனித வளம் தான். அதன் மூலம் தான் தொழில்களை வளர்த்து வருகின்றோம். பிரதமர் மோடி வந்த பிறகு தான் இந்தியாவில் வளர்ச்சி வந்ததாக ஆளுநர் தெரிவித்து இருக்கின்றார். அது தவறான விஷயம். மோடி வந்த பிறகுதான் தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது.
ஜிடிபி மூலதனமும் குறைந்துள்ளது. ஒன்பது சதவீதம் இருந்த ஜிடிபி 4 சதவீதமாக குறைந்துவிட்டது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் ஆட்சி காலத்தில் தான் இந்தியாவின் தொழில் வளர்ச்சி அந்நிய மூலதனத்தில் கொடி கட்டி பறந்தது. மேலும் மாநிலங்கள் நிர்வாக வசதிக்களுக்காக பிரிக்கப்பட்டது. மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதை பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசித்து மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல, மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இது அமைந்துள்ளது. இதில் எங்கே கலாச்சாரம் சீரழிந்தது?. ஆளுநர் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் பேசுகின்றார். நமது கலாச்சாரத்தை விட சிறந்த கலாச்சாரம் வேறு எங்கும் இருக்கின்றதா?. அகண்ட பாரதம் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது பேச்சு, வழக்கத்திற்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.