சென்னை: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில், இரு மாநிலங்களில் போராட்டங்களும் வலுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், "காவிரி பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா மட்டும் நாடகம் ஆடி வருகிறது.
இன்றைய நிலையைப் பொருத்தவரை, காவிரியிலிருந்து நமக்கு எவ்வளவு தண்ணீர் வரவேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி ஆணையமும் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சொல்வதும், காவேரி ஆணையமும் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். மற்றவர்களைக் குறித்து நமக்குக் கவலை இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மிக ராஜதந்திரத்தோடு செயல்பட்டு வருகிறார். நமக்குத் தண்ணீர் வருவதற்கான நடவடிக்கைகளில், அவர் தெளிவாகக் கையாளுகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உங்கள் கூட்டணி ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், நீங்கள் நினைத்தால் தண்ணீர் வந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்துக் கூறுகின்றார். எடியூரப்பாவும் பொம்மையும் அந்த மாநிலத்தில் பெரிய பிரச்சனையை உண்டாக்கினர். அப்போது அண்ணாமலை வாய் திறந்தாரா?.
கர்நாடகத்தில் தண்ணீரைத் திறந்து விடும் போது எல்லாம் பிரச்சனை செய்வது பாரதிய ஜனதா தான். அதற்கு மக்களின் ஆதரவு இல்லை. காவிரி ஆணையம் தெளிவாகச் சொல்லி இருக்கிறது, அணையின் அளவு கொள் அளவிற்கேற்ப, திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையம் கூறி இருக்கிறது. கர்நாடக துணை முதலமைச்சர் காவிரி குறித்து எதிர்ப்பு தெரிவித்தாலும், 15 ஆயிரம் கன அடி திறந்து வைத்துள்ளார்கள்.