தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனா கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பெருமளவு மீண்டு வந்தபோதும், அலட்சியமாக இல்லாமல் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எனவே அந்நாட்டிடமிருந்து, கரோனா குறித்த படிப்பினையை இந்தியா கற்க வேண்டும்.
கரோனா வைரஸை எதிர்த்து மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தைக் குவித்துவைத்துக்கொண்டு மாநில அரசுகளைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்து வருகின்றது.
மேலும் 10 லட்சம் பேரில் 21 பேருக்கு சோதனை செய்கிற வசதிதான் இந்தியாவில் உள்ளது. தற்போதைய சூழலில் 10 ஆயிரம் மக்களுக்கு 8 மருத்துவர்கள் தான் இந்தியாவில் உள்ளனர். ஆனால் இத்தாலியில் 41, கொரியாவில் 71 என்கிற அளவில் இருக்கிறது. மேலும் 55 ஆயிரம் மக்களுக்கு ஒரு அரசு மருத்துவமனை தான் இருக்கிறது.
இத்தகைய குறைவான கட்டமைப்பு இருப்பதால் தான் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 20 நாள்களாக அவர்களுக்கு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை பரிசோதிக்க முடியாத அவல நிலையில் தமிழ்நாடு அரசு இருக்கிறது. சீனாவிலிருந்து துரித சோதனை கருவி (ரேபிட் டெஸ்ட் கருவி) வரும், வரும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை வந்த பாடில்லை.
இந்நிலையில் அச்சம், பீதியோடு மன உளைச்சலில் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள். 21 நாள்கள் மக்கள் ஊரடங்குக்குப் பிறகு இனியாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து கரோனா நோயை வீழ்த்துகிற முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.