சென்னை:நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக, ஜூன் 13ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முதல் முறையாக அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜரானார். அன்று சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இரண்டாவது நாளான (ஜூன் 14) சுமார் 10 மணி நேரம் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று (ஜுன் 15) அமலாக்கத்துறையினர் முன்பு ராகுல் காந்தி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணையில் சுமார் 30 மணி நேரத்திற்கு மேலாக ராகுலிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த வழக்கில், ராகுல் காந்தி நாளை (ஜுன் 17) மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.
இதனிடையே, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது , "இன்று இந்த ஜனநாயகத்தில் ஒரு துக்க நாள். 100 ஆண்டுகள் கடந்த காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் டெல்லி போலீசார் உள்ளே புகுந்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும் தடியடி நடத்தி அவர்களைத் தரையில் தள்ளிவிட்டு வன்முறை நிகழ்த்தியுள்ளனர்.
டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளவர்களை நோக்கி காவல்துறை செல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. அதற்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தார்கள். காங்கிரஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளார்களா அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார்களா. மோடியின் அரசாங்கம் நாம் எதிர்பார்த்ததை விட மோசமான திசையில் சென்று கொண்டு இருக்கின்றது. மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை என்பது எங்களது சொத்து. தேர்தல் ஆணையத்திடமும் அதன் விபரங்களைத் தெரிவித்துள்ளோம். பாரதிய ஜனதாவிற்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குமா சொத்தை எழுதி தர முடியும். காங்கிரஸ் பெயரில் இருக்கும் சொத்தை காங்கிரஸ் கட்சிதான் நிருவகிக்க முடியும். இதில் எந்த வித தவறான பரிமாற்றமும் நடைபெறவில்லை.
எதற்காகப் பிரதமர் மோடி இதுபோல் செய்கிறார். இதற்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன சம்பந்தம், ஒரு சாதாரண சாலை விபத்தில் சிபிஐ விசாரணை செய்வது போல் இருக்கின்றது. இந்த நடைமுறை ஒரு அறக்கட்டளையில் தவறு நடந்தால் அறக்கட்டளை நிர்வாகிகள் தான் அதனை விசாரிக்க வேண்டும். எதற்காக அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்.
மோசமான ஜனநாயக போக்கை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. மத்திய பாஜக அரசின் இந்த செயலைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூன்.16) நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை (ஜூன்.17) மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மோடி அமித்ஷா ஆகியோரின் கடந்த கால வரலாறை பார்த்திருக்கின்றோம். போபாலில் என்ன செய்தார்கள்? எவ்வளவு பெரிய வன்முறை நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆகவே அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டு இருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் பாஜகவின் தன்மை இப்படித்தான் இருக்கும், தாங்கள் யார் என்பதை இப்பொழுது காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.