சென்னை:ராயப்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி. சம்பத்தின் 98-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டு இருந்த ஈ.வெ.கி. சம்பத்தின் திருஉருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "ஈ.வெ.கி. சம்பதின் பேச்சாற்றல் மற்றும் உழைப்பிற்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதே எனது கருத்து. கல்லூரி காலத்தில் அவர் பேச்சைக் கேட்பதற்காக அலைந்து திரிந்து இருக்கிறேன். அவர் அழுத்தம் திருத்தமாகவும் எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்ற பேச்சாற்றலை உடையவர்.
அவரைப் போல பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு ஓரளவுக்கு நான் பேசுவதற்கு காரணம் என்னுடைய குருநாதர் சம்பத் அவர்கள் தான். வட மாநில தொழிலாளர்களை குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பிஜேபி, ஆர் எஸ் எஸ் மறைமுகமாக செய்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாக செய்கிறார். இவர்கள் இரண்டு பேர் தான் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி தாக்கப்பட்டதாக வதந்தி பரவுவதற்கு காரணம்.