தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டை சர்வதேச தகவல் தொழில்நுட்ப சேவை மையமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - சென்னையில் தொழில்துறை கருத்தரங்கம் தொடக்கம்

தமிழ்நாட்டை சர்வதேச தகவல் தொழில்நுட்ப சேவை மையமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By

Published : Nov 26, 2021, 5:21 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு, எல்காட் நிறுவனம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 2 நாள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

'ஆழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான சுற்றுச்சூழலை தமிழ்நாட்டில் உருவாக்குதல்' என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களின் நிறுவனர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுமட்டுமின்றி 7 நாடுகளிலிருந்து தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொழில்நுட்ப கண்காட்சி

இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கில் தமிழ்நாட்டில் தரவு மையம் (data centre) அமைக்க தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில்நுட்பம் இல்லாமல் இயங்க முடியாது

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டில் நாம் இன்று வந்துவிட்டோம், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, விவசாயம், உற்பத்தி என அனைத்து துறைகளும் தொழில்நுட்பம் இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது.

இதை அன்றே உணர்ந்தவர் கருணாநிதி. 1991ஆம் ஆண்டிலேயே அதற்கான திட்டமிடலை கொண்டு வந்தார். அன்றைய திமுக அரசு தான் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு தனியாக துறையை உருவாக்கியது. டைடல் பார்க் என்ற மென்பொருள் பூங்காவை கொண்டு வந்தது திமுக ஆட்சி. திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை ஐடி விரைவு சாலையை உருவாக்கியது திமுக ஆட்சி தான். தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கியது திமுக அரசு தான்.

ஒற்றை சாளர முறை

தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. இந்திய அரங்கிலும், உலக அரங்கிலும் தகவல் தொழில்நுட்பம், மின்னணு பொருள்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது. இந்த முதல் இடத்தை தக்க வைக்க தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். ஒற்றை சாளர முறை (Single Window Clearance System) மூலமாக தொழில் தொடங்க விரும்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான சேவைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். பாரத் இண்டெர்நெட் மூலமாக அகண்ட அலைவரிசை இணைய வசதி கொண்டு வரப்பட்டு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 1gbps வேகத்தில் இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டின் லட்சியமான 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

தரவு மைய கொள்கை

முன்னதாக தமிழ்நாட்டிற்கான தரவு மைய கொள்கையை (Data centres) முதலமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உடன் சென்னை கணிதவியல் கல்வி நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை அவர் பரிமாறிக் கொண்டார்.

இதையும் படிங்க:எம்ஜிஆரின் மூத்த சகோதரர் மகள் லீலாவதி காலமானார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details