சென்னை: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சிகளை கூட்டணைகளை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கின. இதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முதல் ஆலோசனைக் கூட்டம் ஜூன்-23இல் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஜூலை 17,18லும், மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ஆம் தேதியிலும் நடைபெற்றது.
இதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நடந்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (I.N.D.I.A) என பெயர் சூட்டப்பட்டது. எதிர்கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைக்கப்பட்டதற்கு பலதரப்பில் இருந்து எதிர்கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், 26 கட்சிகள் மீது புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் எதிர்கட்சிகள் கூட்டணியை பாஜகவினரும் கடுமையாக விமர்ச்சித்தனர். பிரதமர் மோயும் பல மேடைகளில் பேசும் போது எதிர்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.
மேலும் நாட்டிற்கு இந்தியா என இருக்கும் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் எனவும் பலர் கோரிக்கை எழுப்பினர். இந்நிலையில் இந்தியா பெயர் சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது பாரத் (BHARAT) பெயர் சர்ச்சை துவங்கி உள்ளது. வருகின்ற 9ஆம் தேதி டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு விருந்து அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் தயார் செய்யப்பட்டுள்ள அழைப்பிதலால் தான் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
வழக்கமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியாகும் அறிவிப்புகளில், இந்திய குடியரசுத் தலைவர் (President of India) என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் ஜி20 மாநாடு சிறப்பு விருந்தினர்களுக்கான விருந்து அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் (President of Bharat) என குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. இந்தியாவிற்கு பெயர் மாற்ற வேண்டும் என்ற பேச்சு எழுந்த போதே எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதில் பாரத் என இடம் பெற்றிருந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.