சென்னை :ஸ்பீக்கிங் பார் இந்தியா (Speaking for india) தொடரின் இரண்டாவது குரல்வழிப் பதிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவில் பல்வேறு கருத்துகளை வீடியோ மூலமாக பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த ஆடியோ சீரிஸ்க்கு "ஸ்பீக்கிங் பார் இந்தியா" (Speaking for india) என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைப்பு வைத்து வெளியிட்டார். இந்நிலையில் ஸ்பீக்கிங் பார் இந்தியா சீரிசின் முதல் ஆடியோ பதிவை செப்டம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.
அதில் குஜராத் மாடல், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய கருத்துகளை அந்த ஆடியோ சீரிசில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருந்தார். இந்நிலையில், "ஸ்பீக்கிங் பார் இந்தியா" (Speaking for india) ஆடியோ சீரிஸ்சின் இரண்டாவது பாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
அந்த ஆடியோ சீரிஸ்சில், மத்திய அரசின் திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு மூலம் முறைகேடுகள் நடந்து இருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் அது குறித்து பிரதமர் மோடி, பாஜக அரசு மவுனம் காத்து வருவது ஏன் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்கும் போது 5T எனப்படும் திறன், வர்த்தகம், சுற்றுலா, பாரம்பரியம், தொழில்நுட்பம் ஆகியவை தான் தனக்கு முக்கியம் என்று தெரிவித்ததாகவும் தற்போது இதில் எதை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆடியோ சீரிஸ்சில் கேள்வி எழுப்பி உள்ளார்.
5Tக்கு மாறாக பிரதமர் மோடியின் ஆட்சியை 5C என்ற வகையில் பிரிக்க முடியும் என்றும் அவை வகுப்புவாதம், ஊழல் முறைகேடுகள், மூலதன குவியல், மோசடி, அவதூறு ஆகிய 5Cக்களை கொண்டுதான் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆடியோ சீரிஸ்சில் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியின் பிம்பத்தை இந்தியா கூட்டணி உடைத்து உள்ளதாகவும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
யூடியூப், ஸ்பாடிஃபை, சவுன்ட் கிளவுட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆடியோ சீரிஸ் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பின்னணி குரல் மூலம் முதலமைச்சரின் ஸ்பீக்கிங் பார் இந்தியா சீரிஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :Speaking For India : முதலமைச்சர் ஸ்டாலினின் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" ! இந்திய மொழிகளில் ஆடியோ வெளியீடு!