சென்னை: வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால் மூட்டு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜவ்வு பகுதி கிழிந்திருப்பதாக கூறி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து வலி தீராததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கால் மூட்டு பகுதியில் பேண்டேஜ் கட்டப்பட்டதால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதாகவும், உயிரை காப்பாற்ற காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா திடீரென சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவி உயிரிந்தததாக போராட்டம் வலுத்தது. வீராங்கனை உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வியாசர்பாடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், என்ன தேவை ஏற்பட்டாலும் எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
தொடர்ந்து 10 லட்ச ரூபாய் நிவாரண காசோலையை வழங்கிய முதலமைச்சர், பிரியாவின் சகோதரருக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் ( Data Entry Operator ) பணிக்கான ஆணையை வழங்கினார். மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கவுதமபுரம் திட்டப்பகுதியில் குடியிருப்பிற்கான ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார்.
இதையும் படிங்க:கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை