தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜன. 31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு - tamil nadu cm mk stalin extended more restrictions till jan 31

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு
ஊரடங்கு நீட்டிப்பு

By

Published : Jan 10, 2022, 9:33 PM IST

தமிழ்நாடு அரசு இன்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 7-1-2022இன்படி, இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், இதர நாள்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்துவருகிறது.

மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண். 40-3/2020/DM-I(A), நாள் 27.12.2021இல் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 144இன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் 10-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, உலக சுகாதார நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதன், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில்கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 விழுக்காடு மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

தற்போது ஊரடங்கு காலங்களில் தடைசெய்யப்பட்ட, அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

பொது அறிவுரைகள்

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).

கடைகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வணிக வளாகங்கள், கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்போது தகுந்த இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.

தற்போது கரோனா நோய் வேகமாகப் பரவிவருவதால், பொது இடங்களில் கரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டுவரும் வணிக நிறுவனங்கள், கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கரோனா தொற்று அதிகரித்துவந்தாலும், உரிய சிகிச்சை அளித்திடத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இருப்பினும், பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.

பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தகுந்த இடைவெளியினைக் கடைப்பிடித்து இரண்டு தவணை தடுப்பூசியினைச் செலுத்திக் கொண்டால் கரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Third wave in TN: ஒமைக்ரான், டெல்டா பரவல் பிப்ரவரியில் உச்சத்தைத் தொடுமா?

ABOUT THE AUTHOR

...view details