தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

MK Stalin Japan Visit: இந்தியா - ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துக: JETRO தலைவரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துக

இந்தியா - ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும் என்று JETRO தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 29, 2023, 10:40 AM IST

சென்னை: ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (Japan External Trade Organization - JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, 25.5.2023 அன்று ஜப்பான் நாட்டின் ஒசாகா சென்றார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர, தனது இரண்டு நாள் ஒசாகா பயணத்தை முடித்துக் கொண்டு 27.5.2023 அன்று டோக்கியோ வந்தடைந்தார். இந்த அரசு முறை பயணங்களின்போது முதலமைச்சர், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, இன்று (மே 28) காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (Japan External Trade Organization – JETRO) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ (Mr. Ishiguro Norihiko) அவர்களையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ (Mr. Kazuya Nakajo) அவர்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்தார். இதன் பிறகு, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதாரவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு (Global Investors Summit in Chennai, 2024) அழைப்பு விடுத்தார்.

JETRO தலைவருடனான சந்திப்பின்போது, முதலமைச்சர் பேசியதாவது, 'JETRO இந்தியாவுடன் இணைந்து மிகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முக்கியப் பங்கை ஆற்றி வந்துள்ளது. இதனை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆட்டோமொபைல், கனரக பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு நடத்த வேண்டும்: Industry 4.0-ஐ நோக்கி, தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவிலான சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முன்னேற்ற இந்தியாவின் ஐ.டி. திறன்களும் ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும். இதைப் போன்ற துறைகளில் நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என நான் நம்புகிறேன். இச்சந்திப்பின்போது, முதலமைச்சர், மேம்பட்ட உற்பத்தியில் சிறந்த பங்குதாரர்கள் ஜப்பானியர்கள். எனவே, தமிழ்நாட்டில் திறன்மிகுந்த மனிதவளம் உள்ளதால் 4.0 போன்ற தொழில்நுட்பப் பகுதிகள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அத்தோடு, இந்தியா - ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பின்போது, JETRO தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், சென்னையில் நடைபெறவுள்ள '2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு' வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Trichy Aristo Bridge: இனி டிராஃபிக் ஜாம் இல்லை.. அரிஸ்டோ மேம்பாலத்தால் திருச்சி மக்கள் ஹேப்பி!

ABOUT THE AUTHOR

...view details