சென்னை:ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 14க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். விசாகபட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் தொழில்நுட்பம் காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து.
அப்போது அதே வழித்தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து ராயகடா பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 14க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிக்னல் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு விஜயநகரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த ஜூன் மாதம் ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ரயில் விபத்து ஏற்பட்ட அடுத்த சில மாதங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் தற்போது நடந்துள்ள ரயில் விபத்து மிகுந்த மனவேதனையை தருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பெரும்பாலான இந்தியர்கள் ரயில் மூலமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் அடுத்தடுத்த ரயில் விபத்து சம்பவங்கள் கவலை அளிக்கிறது. ரயில்வே துறையும், மத்திய அரசும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து! 8 பேர் பலி! பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!