மதுரை:உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து 55 பேர் கொண்ட குழுவினர், தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். தங்களது ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு வந்து, ராமேஸ்வரம், நாகர்கோவில் பத்மநாபசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளனர்.
இன்று(ஆகஸ்ட் 26) அதிகாலையில் ரயில் மூலம் மதுரை வந்துள்ளனர். இவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகளும் தனியாக பிரிக்கப்பட்டு, மதுரை சந்திப்பிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், இன்று அதிகாலையில் ரயிலில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே போலீசார் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டரைப் பயன்படுத்தி சமைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுற்றுலா ரயில் பெட்டிகள் தீ விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "உத்தரபிரதேச மாநிலம் சித்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா ரயிலில், நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு, மதுரை ரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.