சென்னை :நாட்டின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியான பாத்திமா பீவி (வயது 96), கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இன்று காலமானார். பாத்திமா பீவி 1927ஆம் ஆண்டு கேரளாவின் பத்தனம்திட்டாவில் பிறந்தார். இவர், திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1950ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வழக்கறிஞராக தனது பணியைத் துவங்கினார்.
1950ஆம் ஆண்டு நீதித்துறையில் தனது பயணத்தை துவங்கிய பாத்திமா பீவி விரைவிலேயே நீதித்துறையில் முன்சிஃப் ஆக உயர்ந்தார். பின்னர் மாஜிஸ்திரேட்டாக, மாவட்ட அமர்வு நீதிபதியாக, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராகவும் உயர்ந்தார். பின்னர் 1983ஆம் ஆண்டு பாத்திமா பீவி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1989ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
மேலும், நீதித்துறையின் இவ்வளவு உயர் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமிய பெண் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பாத்திமா பீவி தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 1997 முதல் 2001 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.