சென்னை: பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27.6.2023) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 27ஆம் நாள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாடிட வேண்டும் என ஆணையிட்டார். அதன்படி, சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் சமத்துவபுரம் தந்து சமூக நீதி காத்திட்ட சமூக நீதி காவலர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டிடும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டமான “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கி, தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைக்கான நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் ஒரு சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இத்தகைய மானிய சலுகையுடன் வேறு எந்த மாநிலத்திலும் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட இந்த குறுகிய மூன்று மாத காலத்தில் இதுவரை 127 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு ரூ. 24.26 கோடி மானியத்துடன் ரூ. 45 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம்- கொடூர், திருச்சி மாவட்டம் - மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் - சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 21,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.