சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பதை கண்டறிந்து உள்ள சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதை மீட்டு மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தமிழக கோயில்களில் உள்ள விலைமதிக்க முடியாத பழங்கால சிலைகள் அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டது.
பழங்கால சிலைகளை கடத்தி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்துக்கு விற்றதாக சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுபாஷ் கபூர் தற்போது தமிழக சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சிலைகள் உள்பட ஏராளமான சிலைகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு திருடப்பட்ட இடத்திலேயே நிறுவப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுபாஷ் கபூரால் தமிழக கோயில் ஒன்றில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சோழர் காலத்தை சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் (பாம்பின் மேல் நடனமாடும் கிருஷ்ணர்) உலோகச் சிலை, தற்போது அமெரிக்காவில் உள்ள கலைக் கூடம் ஒன்றில் இருப்பதை தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.