இது தொடர்பாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 1ஆம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 7 வயது சிறுமியை சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்தனர். குழந்தை ஜூன் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு காணாமல் போயிருக்கிறது. உடனடியாக பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தேடுதல் பணியில் ஈடுபடவில்லை.
22 மணி நேரத்திற்குப் பின் அந்தக் குழந்தை சுயநினைவு இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அந்த குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்பிறகுதான் இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், அந்தக் குழந்தையின் விவரத்தை வெளியிட்டது சட்டத்துக்கு எதிரானது. இது கண்டிக்கத்தக்கது. இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும்.