தமிழ்நாட்டில் தற்போது உருமாறிய கரோனா கிருமிகளால் அதன் பரவக்கூடிய வேகம் அதிகரித்துவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதுவரை மக்கள் நல்வாழ்வுத் துறை கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை பரவிவருவதாக எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் தற்சமயம் கரோனா இரண்டாம் அலை வீசிவருவதால் அரசு அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதால், தற்போது உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.
மேலும் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாலும் அரசின் நெறிமுறைகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்ற வேண்டும்.
அரசின் வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியுடன் கண்டிப்பாக குழந்தைகளை அமரவைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால் அதற்கான சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும். பள்ளியில் ஒவ்வொரு குழந்தைக்கும் கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
கிருமிநாசினி கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி வைக்க வேண்டும். மாணவர்களின் கைகள் சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் கண்டிப்பாக உறுதிசெய்ய வேண்டும். வகுப்பறைக்குள் மாணவர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு செல்லாமல், தகுந்த இடைவெளியுடன் செல்வதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.