சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை மீட்பு பணிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், "அன்பார்ந்த கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஏனைய துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களே, இந்த இடர்மிகு காலகட்டத்தில் நீங்களும் உங்களுடைய குழுவினரும் மேற்கொண்டு வரும் சிறப்பான பணியை நான் பாராட்டுகிறேன்.
பின்வரும் கருத்துக்களை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்:
1. பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள், தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய பின்னர், பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும்.
2. பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
3. இதுவரை வெள்ளம் வடியாமலுள்ள ஒவ்வொரு தெருவையும் பட்டியலிட்டு, நீரை வெளியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்கவும். இன்று (டிச. 8) மாலைக்குள் அனைத்து தெருக்களிலும் நீரை அகற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும்.
4. பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் ஒருங்கிணைந்து மின்சாரம் தடைபட்ட இடங்கள் மற்றும் தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
5. இலை தழைகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட வேண்டும்.
6. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று மேலாண்மை தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து ஒருங்கிணைத்தல். குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீரகற்று நிலையங்களை கணக்கெடுத்து, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.
7. ஏனைய மாவட்டங்களில் இருந்து பெறப்படும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முறையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விநியோகிக்கப்பட வேண்டும்.
8. பால் விநியோகம் மற்றும் பிற இன்றியமையாப் பொருட்களின் இருப்பினைக் கணக்கிடுங்கள். யாதொரு வணிகரும் நிர்ணயிக்கப்பட்ட உயரளவு விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்யவும். நிர்ணையிக்கப்பட்ட உயரளவு விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் அதிக விலை வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்.
9. பொதுமக்களின் நலன்கருதி, தோட்டக்கலை மற்றும் கூட்டுறவு துறை 150 நடமாடும் காய்கறி கடைகளை திறந்துள்ளது. காய்கறிகளுடன் சேர்த்து பாலையும் அவர்கள் விற்பனை செய்வார்கள். தேவையுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவை கிடைப்பதற்கான வழிகளை உறுதி செய்யவும்.
10. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்களின் செயல்பாட்டினைக் கண்காணிக்கவும்.
11. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை (டிச.11) முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும்.
12. அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
13. தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
14. பாதிக்கப்பட்ட மக்களின் இன்னல்கள் மற்றும் துயரங்களை தணிப்பதற்கு நாம் பணியாற்றி வருகிறோம். எனவே, தயவுகூர்ந்து அதிகாரிகளையும், பணியாளர்களையும் ஊக்கப்படுத்துங்கள். அவர்களை பொதுமக்களிடம் கனிவுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ளுமாறும், வாக்குவாதம் மற்றும் மோதல்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்துங்கள்.
நமது அலுவலர்களும், பணியாளர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் இரவு பகலாக தங்களது கடமைகளை நிறைவேற்றி வருவதை நாம் மனதார பாராட்டுகிறோம்.
15. அரசின் செயல்பாடுகளும், மீட்பு முயற்சிகளும் அனைவரும் அறியும் வகையில் இருக்க வேண்டும். எனவே மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். நாம் இயல்பு நிலையை நெருங்கிவிட்டோம். முழு இயல்பு நிலையை அடைந்து விடுவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துக்களையும், அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றம் டிச.11 வரை ஒத்திவைப்பு - மஹுவா பதவி நீக்கத்தை தொடர்ந்து அறிவிப்பு!