சென்னை: தலைமைச் செயலகத்தில், நேற்று (27.05.2023) பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு முன்னிலையில் பால் உற்பத்தியாளர்கள் சேவையை மேலும் அதிகரிக்கவும் அரசின் நலத்திட்டங்களை பால் உற்பத்தியாளர்களுக்கு கொண்டு சேர்க்கவும் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சரின் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந.சுப்பையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர், கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள காலி நிலங்கள், சங்க அளவில் உள்ள காலி நிலங்கள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகள் அனைத்திற்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்றும் அக்கறவை மாடுகளுக்கு தேவையான சரி விகிதக் கலப்பு தீவனத்தை தடையின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.புதிய பால் உப பொருட்கள் ஆவினில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பால் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும் நிலையான தரத்திலும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை!