சென்னை தலைமை செயலகத்தில், மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கியக் கோரிக்கையை முன் வைத்து கடிதம் அளித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங்...! அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இலவச மின்சார திட்டங்களுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும்.
நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு கோவிட் கால நிதியாக 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோன்று, மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகையை ஈடு செய்ய மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்து 622 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.அவற்றை தமிழ்நாட்டிற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்காமல் நிலுவையில் உள்ள ரூ.50.88 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிட்டத்தக்கது.