சென்னை:விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர். இதில் சங்கர், தரணிவேல், மண்ணாங்கட்டி, சந்திரன், சுரேஷ் ஆகியோர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி கள்ளச்சாராயம் குடித்த பலரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா, அவர்களது உறவினர் சின்னத்தம்பி, அவர் மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகியோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து உள்ளனர். இதனால் அஞ்சலி தவிர்த்து ஏனைய நான்கு பேரும் உயிர் இழந்தனர். மேலும் அஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, பதுக்கி வைத்திருந்தது என அவ்வப்போது சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உண்டு. தற்போது கள்ளச்சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டிருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விழுப்புரம், செங்கல்பட்டில் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.