தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி, 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Stalin
Stalin

By

Published : Jun 8, 2021, 8:02 PM IST

கரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி ஆந்திரா, பிகார், சத்தீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், " தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம்.

நம் அனைவரின் கூட்டு முயற்சிக்கான பலன்

ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்திய நிலையில், நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, இந்தியப் பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று (ஜூன் 7) மாற்றியமைத்துள்ளார்.

அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். இத்தகைய சூழ்நிலையில், கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கரோனா பெருந்தொற்றின் முதலாவது, இரண்டாவது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

கடந்தாண்டு போன்று கடனாளர்களுக்கு நிவாரணம் அளிக்கவில்லை

2021 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை.

கூடுதல் கால அவகாசம் அளிக்க கோரிக்கை

இதனால் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு தாம் கொண்டு சென்றுள்ளோம். எனவே, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ரூ .5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்துச் சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

நமது கூட்டு வலிமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்

இந்தக் கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்" என அந்தக் கடிதத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details