சென்னை: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது மிகுந்த வேதனையளிக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்”, “இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு”, “மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்”, “கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது” போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும்.
தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு) மட்டும் தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.
மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது.
மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது.