சென்னை:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
30 கோடியே 72 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பயன்பாட்டிற்காக 25 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை வழங்கினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தலைமைச் செயலகத்தில் இன்று (மே. 10) நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் 30 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 25 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக முதற்கட்டமாக 12 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, தற்போது வரை 277 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 205 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்தில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவிலும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் 3 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலும், தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் கடத்தூர் ஒன்றியத்தில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
அதேபோல், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒன்றியத்தில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவிலும், கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஒன்றியத்தில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவுக்கு என தனி அலுவலக இடம், கணினி அறை, எழுது பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 17 ஆயிரத்து 324 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
மேலும், திருச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கான தனித்தனி அறைகளுடன் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 28 ஆயிரத்து 716 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாக கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க :சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரம்.. அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு!