தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாம்பலம் ரயில் நிலையம் - தி நகர் பேருந்து நிலையம்.. நிமிடங்களில் கடக்க ஆகாய நடைபாதை- முதலமைச்சர் துவக்கி வைத்தார்!

சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், 28 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் சென்னை மாம்பலம் ரயில் நிலையம் - தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்ட ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

MK Stalin
MK Stalin

By

Published : May 16, 2023, 8:51 PM IST

சென்னை : மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை 28 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நகரும் படிகட்டு மற்றும் மின் தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே.16) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விழாவில் மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் இருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை 28 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தியாகராய நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், 28 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில், 7 மீட்டர் உயரத்தில் 570 மீட்டர் நீளம் மற்றும் 4 புள்ளி 20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின் தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் ரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர் வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் இந்த ஆகாய நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தால் தினமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவர்.

தியாகராய நகரில் ஆகாய நடைமேம்பாலத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அந்நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார். பின்னர், நடைமேம்பாலத்தில் இருந்து இறங்கி ரங்கநாதன் தெரு முழுவதும் நடந்து சென்று இரு மருங்கிலும் கூடியிருந்த பொதுமக்களின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :சாலை அமைக்க அனுமதி பெற்றுத் தந்த எம்.பிக்கு பூரண கும்ப வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details