சென்னை :5 முறை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர் பர்காஷ் சிங் பாதல்(95). சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரான பர்காஷ் சிங் பாதல், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (ஏப். 25) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் "நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய திரு.பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து அம்மாநில நலனில் மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்தவர் திரு. பிரகாஷ் சிங் பாதல் அவர்கள். அவரது பங்களிப்புகளை அம்மாநில மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருமே எந்நாளும் நினைவு கூர்வர். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், பஞ்சாப் மாநில மக்களுக்கும், சிரோமணி அகாலி தளம் கட்சியினருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டு உள்ளார்.
பரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.