சென்னை:துபாயின் அண்டை நகரகமான அல் ரசாவில் உள்ள 4 மாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவுக்கு குடியிருப்பில் இருந்து கரும்புகை வெளியேறியது. 4-ஆவது மாடியில் பற்றிய தீ மெல்ல குடியிருப்பு முழுவதும் பரவத் தொடங்கியது. தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்த துபாய் உள்நாட்டு பாதுகாப்பு தலைமை கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ அணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 4 இந்தியர்களில் 2 பேர் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் என்றும் மற்ற இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.
மேலும் அந்த கட்டடத்தில் பணியாற்றிய 3 பாகிஸ்தானியர்கள், நைஜீரிய பெண்மணி ஆகியோர் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே உயிரிழப்புகளுக்குக் காரணம் என கூறப்பட்டது.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இதை செய்யுங்க.. அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய அட்வைஸ்!
இந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த இமாம் காசிம் மற்றும் முகமது ரபிக் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் துபாய் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த இமாம் காசிம் மற்றும் முகமது ரபிக் ஆகியோர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியினை கேட்டு வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை விரைவாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை இந்த பணியில் துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 2 தமிழர்கள் உள்பட 16 பேர் பலி!