சென்னை:தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து, மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(நவ-12) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ‘மிகமிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்டுவதற்காக, மிகமிக அவசரமான நிலையில் இந்தச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டமானது இங்கு கூட்டப்பட்டுள்ளது என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக் கொள்கைக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது.
சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொடுத்து அனைத்திலும் முன்னேற்றுவதற்குப் பயன்படும் மாபெரும் தத்துவம்தான் சமூகநீதிக் கொள்கை. ''சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது'' என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம் ஆகும்.
சமுகநீதி சட்டத்திருத்தம்:இந்தத் திருத்தத்துக்குக் காரணம், ''happenings in madras" என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு அவர்கள். இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தம்தான் இந்தியா முழுமைக்குமான மக்களது நல்வாழ்வுக்கு வழிகாட்டியது. கடந்த முக்கால் நூற்றாண்டு கால சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்கள் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் 'socially and educationally backward' என்பதுதான் வரையரையாக உள்ளது. அதே சொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது.
அதாவது, சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை. அதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. அதன்படி ஒரு சட்டத்தை 2019 ஆம் ஆண்டு செய்தார்கள். அந்தச் சட்டத்தைத்தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளார்கள்.
சமூகத்தில் முன்னேறிய சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசினுடைய திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இதன் சூட்சமத்தை நான் விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை.
இதற்குள் இருக்கும் அரசியல் லாப நோக்கங்கள் குறித்து இந்த இடத்தில் நான் பேசவும் விரும்பவில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு முரணானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது Economically என்ற சொல்லையும் சேர்க்கச் சொல்லி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
நேருவும், அம்பேத்கரும் ஏற்கவில்லை: இதனை பிரதமர் நேரு அவர்களும் ஏற்கவில்லை. சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் ஏற்கவில்லை. Economically என்ற சொல்லை சேர்க்கலாமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே விழுந்தது. Economically என்ற சொல்லைச் சேர்க்கக் கூடாது என்று 243 வாக்குகள் விழுந்தன. இப்படி இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல்.
இன்றைக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மூன்று நீதிபதிகள் ஆதரித்துள்ளார்கள். ஆனால், 1992 ஆம் ஆண்டு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். எனவேதான், சமூகநீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானதாக ஒன்றிய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளதை நாம் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது.