சென்னை: வங்கக் கடல் மற்றும் அதனருகில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கின.
பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி பல்வேறு விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் தொடர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு செய்ய வேளாண்மைத் துறை அமைச்சர் மற்றும் உணவுத் துறை அமைச்சர், மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவை முதலமைச்சர் நியமித்தார்.
பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும், விவசாயகளை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து பயிர் சேதம் குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை நேரடிக் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட தளர்வுகளை வழங்கிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விளக்கிய அமைச்சர்கள், அது தொடர்பான ஆய்வு அறிக்கைகளையும் வழங்கினர். அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நிவாரணத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 விழுக்காடு மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
மேலும் நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு 3 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.
கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில், விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 விழுக்காடு மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும். பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Breaking: சிரியா, துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 600 பேர் பலி எனத் தகவல்!