சென்னை : கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அரசு முறை பயணமாக இன்று (ஆகஸ்ட். 5) தமிழ்நாடு வந்தார். டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் காலை 11 மணி அளவில் புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மைசூர் விமான நிலையத்திற்கு மதியம் 3 மணியளவில் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மூலம் நீலகரி மாவட்டத்திற்கு விரைந்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு திரெளபதி முர்மு வந்தடைந்தார். முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அதன் பிறகு யானை பாகன்களுடன் கலந்துரையாடடினார். தொடர்ந்து ஆஸ்கர் வென்ற "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை அகியோரை சந்தித்து பாராட்டினார்.
அதன் பிறகு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் மைசூரூக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து மைசூரில் இருந்து விமானம் மூலம் இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.