சென்னை : தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் அவர் கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
1982ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா, 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி உள்ளார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' படம் மூலம் உதவி இயக்குநராக தன் பயணத்தைத் தொடங்கிய மனோபாலா பின்னாட்களில் குடும்பப் படங்களையும், ஜனரஞ்சகமான காதல் படங்களையும் வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நடிகர் மனோபாலா மறைவுக்கு திரைத்துறை பிரபங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்,"பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என தனது இரங்கலைப் பதிவிட்டு உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், "இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
நடிகர் மனோபாலாவின் குருவான இயக்குநர் பாரதிராஜா, தனது உதவியாளர் மனோபாலாவுடன் கொண்ட நீங்கா நினைவுகளை வீடியோவாக பேசி வெளியிட்டு உள்ளார். தான் வெளியூரில் இருப்பதாகவும் மனோபாலா இறப்பு தகவல் கேட்டு துயருற்று, சென்னை திரும்ப உள்ளதாகவும் பாரதிராஜா அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.