சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எரிசக்தித் துறை சார்பில் செவாலியே சிவாஜிகணேசன் சாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வளைய சுற்றுத்தர அமைப்பினை (Ring Main Unit) தொடங்கி வைத்ததோடு, சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட்ட 28 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 28 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் ரூ.787 கோடி மதிப்பீட்டில் விநியோக மின்மாற்றிகள் மற்றும் மின்வழிப் பாதைகளுக்கு புதியதாக 5,692 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் (RMU) நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுள், ஏற்கனவே 216 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் (RMU) ரூ.31.31 கோடி செலவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், சேப்பாக்கம், சைதாப்பேட்டை, துறைமுகம், ஆலந்தூர், ஆவடி, அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே. நகர், இராயபுரம், தி. நகர், திரு.வி.க. நகர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய 28 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,488 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் (RMU) ரூ.360.63 கோடி செலவில் நிறுவும் பணிகள் முடிவுற்று நேற்று தமிழ்நாடு முதலமைச்சரால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.