சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள ரேடிசன் புளு ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசுகையில், “ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என 4 தென் மாநிலங்கள், பாண்டிச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபர் என 3 யூனியன் பிரதேசங்களுக்கான 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் பட்டியல், எலெக்ட்ரால் ரோல் எல்லாம் எப்படி தாயார் செய்துள்ளது, மக்களின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது, அரசியல் கட்சியினருக்கு எப்படி விழிப்புணர்வு கொடுத்துள்ளோம், வாக்குப்பதிவு இயந்திரம் எல்லாம் முறையாக இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் ரிவியூ செய்தார்கள்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம் எல்லாம் வந்துள்ளது. இயந்திரங்கள் முதல் நிலை ஆய்வு செய்யப்பட்டு, எல்லாம் தயார் நிலையில் உள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் மற்றும் திருத்தம் செய்யலாம். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.