இதுகுறித்து அவ்ர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,’’தமிழநாட்டில் ஏப்ரல் இரண்டாம் தேதிவரை 412 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ராணிப்பேட்டை தொகுதியில் ஒரே வீட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கு 91.56 லட்சம் ரூபாயும், சிவகாசி தொகுதியில் 45 லட்சம் ரூபாயும், பாளையங்கோட்டையில் 12.17 லட்சம் ரூபாயும், விருதுநகர் தொகுதியில் 65 லட்சம் ரூபாயும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 96 லட்சம் ரூபாயும், சைதாப்பேட்டை தொகுதியில் 1.3 கோடி பணமும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 11.38 லட்சம் பணமும், வேலூர் மாவட்டத்தில் 1.06 கோடி பணமும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 1.23 கோடி ரூபாயும் கைபற்றப்பட்டுள்ளன.
இவை தவிர கள்ளக்குறிச்சியில் 7600 லிட்டர் அளவுக்கு சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படை தன்மையோடும் நடத்த ஆணையம் விரும்புகிறது. பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்த தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.