சென்னை: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.
குறிப்பாக, இதற்கென ‘6B’ என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘NVSP போர்ட்டல்’, வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம். அல்லது, வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் ‘6B’ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு, இதற்காண பணிகள் நடைபெற்று வருகின்றன.