சென்னை:இந்தியா போன்ற பன்முகத்தன்மை உடைய நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானதாக தான் பார்க்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினரும் அடைந்துள்ள சமூக மற்றும் பொருளாதார நிலையை பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்தியாவில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கை நிச்சயம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகவும் அமையும் என தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது அவ்வளவு கடினமானது ஒன்றல்ல. தமிழ்நாடு அரசிடம் உள்ள கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை ஓரிரு மாதங்களில் முடித்துவிட முடியும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான எந்த ஒரு முயற்சியுமே தற்போது வரை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனம்.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இதற்கு முன்பு தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளும், அவர்களுடன் இப்போது வரை கூட்டணியிலே அல்லாத அரசியல் கட்சிகள் வரை வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவை பின்பற்றி ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
அதுபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பையும், அதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அந்தக் கணக்கெடுப்பின் போதே சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என தெரிவித்தார். இது தமிழ்நாடு அரசியல் கட்சயினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், "கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல் உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கொள்கை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், அதில் தெரிய வரும் தரவுகளின் அடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக பீகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறி விட்டது.
மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா? மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதலமைச்சர், சமூகநீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?.
மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல் இப்போது நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன் நோக்கத்தையும், தேவையையும் புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசின் வாயிலாகவே நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்" என் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் - மீண்டும் உறுதிப்படக் கூறிய ஸ்டாலின்!