சென்னை: 2023 -24ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று(மார்ச்.20) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், சென்னைக்கு புதிய 4 வழி மேம்பாலம், உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.
விளையாட்டு நகரம்:சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது. இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன் முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என்றும், இதற்கு பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் நவீன விளையாட்டு வசதிகளுடன் விரிவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு, கூவம் சீரமைப்பு:அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்கப்படும் என்றும், அதன் முதல் கட்டமாக 44 கிலோ மீட்டர் நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அதுமட்டுமின்றி ஆற்றை சுற்றிலும் எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதை , திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற அம்சங்கள் அமைய இருக்கிறது. இத்திட்டத்திற்கு அரசு-தனியார் பங்களிப்புடன் 1,500 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது சதுக்கம்:சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு பொழுதுபோக்கு மையங்கள்:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய நான்கு இடங்களில் விளையாட்டு, பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சிக் கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக்கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைய உள்ளது.
வட சென்னை:சென்னையில் சீரான சமமான வளர்ச்சியை உறுதி செய்ய "வட சென்னை வளர்ச்சி திட்டம்" என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்த இருக்கிறது. இத்திட்டத்தில் கட்டமைப்பு பற்றாக்குறையும், வளர்ச்சி குறியீட்டுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
புதிய 4 வழி மேம்பாலம்:சுமார் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது. பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனை பெற்று, சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பாதைக்கு மேல் கட்டப்படவுள்ள இந்த மேம்பாலும் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலவச வைஃபை, டெக் சிட்டி:சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் தமிழ்நாடு தொழில் நுட்ப நகரங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: Tamil Nadu Budget: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்.. பட்ஜெட்டில் கூறியது என்ன?