சென்னை:தமிழக சட்டசபையில் கடந்த 20 ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜ தாக்கல் செய்தார். தொடர்ந்து மறுநாள் அதாவது 21 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
நேற்று (மார்ச் .22) உகாதி திருநாளை முன்னிட்டு சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச். 23) தொடங்குகிறது. இன்று காலை சட்டசபை தொடங்கியதும் சபாநாயகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானத்தை வாசிப்பார்.
பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட உள்ளன. அதை தொடர்ந்து உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து சட்டசபை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வழக்கமாக, சட்டசபை தொடங்கியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லை. அதற்கு பதிலாக நேரமில்லா நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு பொது மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த நேரமில்லா நேரத்தில், கவனஈர்ப்பு தீர்மானங்களை எதிர்க் கட்சிகள் கொண்டு வர திட்டமிட்டு உள்ளன.