சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. திமுக அரசு அமைந்ததும் தாக்கல் செய்யப்படக்கூடிய முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் கல்வி அமைப்பினரிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் கல்விக்கு என்ன தேவை என அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி நம்மிடம் கூறுகையில், "கல்வி என்பது அடிப்படை ஆதாரம். அதற்கு செய்யக்கூடிய செலவுகளை மூலதனமாகத் தான் பார்க்க வேண்டும். எனவே, தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் கல்விக்கு அதிகப்படியாக நிதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
வரும் பட்ஜெட்டில் கல்வி சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு வருமானத்திற்கு தனியாக ஒரு பட்ஜெட் ஒதுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பற்றாக்குறை, இடப் பிரச்னைகள், கட்டடப் பிரச்னைகள், தூய்மைப் பணியாளர்கள் நியமனம், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் இப்படி எல்லா இடங்களிலும் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு தொடக்கப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வகுப்புக்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் கல்வித்தரம் உயரும்.