தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர் ஆண்ட்ரூஸ் ஜேசுராஜ், தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமைக்கான பல்வேறு செயல்களை இந்தியாவிற்கு முன்மாதிரியாக உருவாக்கி தந்துள்ளோம். ஆனாலும் நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை நீண்ட தூரம் உள்ளது.
எனவே வரும் நிதி நிலை அறிக்கையில் குழந்தைகளுக்கான கல்வி, ஊட்டச்சத்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி, உடல் நலம் சார்ந்தவற்றிற்காக இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே குழந்தை செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றும் கேள்விக்குறியாக உள்ளன. அதிகளவில் பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர வேண்டும் என்றால் தேவையான அளவு கழிப்பிட வசதிகள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர் ஆண்ட்ரூஸ் ஜேசுராஜ் மேலும், ஸ்மார்ட் வகுப்பறை என நாம் பேசினால் மட்டும் போதாது. ஆசிரியர்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சியினை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஈராசிரியர் பள்ளிகளை மாற்றி ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஒரு பள்ளிக்கு ஐந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவர்கள் 50 விழுக்காட்டினர் பேர் உயர்கல்விக்கு சென்றாலும், அரசு கல்லூரிகள் இல்லாததால் தனியார் கல்லூரி நாடி செல்லும் நிலை உள்ளது. அதனை மாற்றுவதற்கு கூடுதலாக கல்லூரிகளை தொடங்கி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான கற்றல் முறையில் மாற்றங்களை மேலும் உருவாக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே செயல்வழி கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது. அவற்ரை மாற்றி மனப்பாட முறையில் தற்போது பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி அளிப்பதற்கு பள்ளி வாரியாக தரம் பிரித்து கற்பிக்கவேண்டும். மாநில அளவில் பொதுத்தேர்வு ஒரே தேர்வு என நடத்தாமல் அந்தந்த பகுதிகளில் வாழும் மாணவர்களின் திறனுக்கு ஏற்ப தேர்வு முறைகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வெறும் நிதிநிலை அறிக்கை மட்டும் கிடையாது ஒரு மாநிலத்தின் கொள்கை சார்ந்த கருத்துக்களை சொல்லக்கூடிய அறிக்கையாகும். இந்த அறிக்கையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி குறித்த செலவினங்களும் இடம்பெறும்.
வரும் நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வியில் அருகாமைப் பள்ளியாக அறிவிக்கக் கூடிய ஏற்பாடு இருக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்றால் எல்லா பள்ளிகளையும் அருகாமைப் பள்ளிகளாக அறிவிக்கவேண்டும். என தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது அதனை கருத்தில் கொண்டு மாநில அரசு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகள் பல்கலைக் கழகங்களை வலுப்படுத்துவதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதி அதற்கு தேவையான நிதி போன்றவை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல் அவர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் அறிவு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என்றார்.
இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி - பங்குச் சந்தைகள் கடும் சரிவு