சென்னை:தமிழ்நாடு பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே.அண்ணாமலை கடந்த 2021 ஜூலை மாதம் பொறுப்பேற்றது முதலே திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சனைகளை பேசும் ஒரே கட்சி பாஜக என்று வெளிப்படையாகவே தனது பேட்டிகளில் அண்ணாமலை பேசி வந்தார்.
குறிப்பாக திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை அண்ணாமலை கூறி வந்தார். இதற்கிடையே அவர் அணிந்திருந்த ரஃபேல் வாட்சுக்கான பில் விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பிலும் அண்ணாமலையை நோக்கி கேள்விக் கணைகளை எழுப்பினார்.
ஒரு கட்டத்தில், திமுக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை வெளிக்கொண்டு வர தான் முயற்சிப்பதால் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் ரஃபேல் வாட்ச் விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். ஏப்ரல் மாதத்தில் அதற்கான பில் மற்றும் திமுக சார்ந்த சிலரின் முக்கிய ஆவணங்களை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.