சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று பிற்பகல் 2.45 மணி முதல் சுமார் 4 மணி வரை ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து 'திமுக பைல்ஸ்-2' ஆவணங்களை ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து வழங்கியதோடு, அதற்கான அறிக்கை ஒன்றையும் ஆளுநரிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கே.அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது," தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தோம், அப்போது, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வரும் 28-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் பாதயாத்திரையைத் தொடங்கவுள்ளார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த பாதயாத்திரையானது நடைபெறவுள்ளது. இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளார். அதோடு, இந்த யாத்திரையில் பங்கேற்க அதிமுக, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி என தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு கே.அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!