சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "டெல்லி மதுபான ஊழலில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தவறு இருப்பதாகத் தெரிய வருகிறது. வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதில் ஆதாரம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. இதை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்து உள்ளது.
மேலும் கெஜ்ரிவாலுக்குச் சம்மன் தரப்பட்டு உள்ளது. அவர் அதற்குப் பதில் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அமலாக்கத் துறை என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். தவறு செய்யாத முதலமைச்சர் ஏன் பயந்து பேச வேண்டும்.
இந்தியா கூட்டணியில் இல்லாத சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்து உள்ளது. அதற்கும் பாஜக-விற்கும் சம்பந்தம் இருக்கிறதா. சமீபத்தில் அமித்ஷாவை அவரது மகன் சந்தித்தார். தவறு செய்பவர்களை அந்தந்த அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. பாஜக அரசு தான் அமலாக்கத்துறையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதாக எதிர்க்கட்சிகள் சொல்வது பொய். மடியில் கனம் இல்லை என்றால் வழியில் என்ன பயம் இருக்க வேண்டும்.