தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக பாஜகவின் புதிய திட்டம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்சை இன்று நேரில் சந்தித்தனர்.

பாஜகவின் நிலைப்பாடுதான் என்ன? - இபிஎஸ், ஓபிஎஸ் உடன் பாஜக தலைமை சந்திப்பு
பாஜகவின் நிலைப்பாடுதான் என்ன? - இபிஎஸ், ஓபிஎஸ் உடன் பாஜக தலைமை சந்திப்பு

By

Published : Feb 3, 2023, 11:04 AM IST

சென்னை: கடந்த ஜனவரி 4ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இதனால் பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல் இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனிடையே தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டன. இதன்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ஈவிகேஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரு அணிகளாகப் பிரிந்துள்ளதால், இரு தரப்பிலும் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உடன் உள்ள பாஜகவினரை ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினரும் கமலாலயத்தில் வைத்துச் சந்தித்தனர்.

இருப்பினும் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ எனத் தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் ஆகியோர் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக இருவரும் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனிடையே அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகாமல் உள்ளதால், இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. எனவே ஈபிஎஸ் தரப்பில் ஜனவரி 27 அன்று உச்ச நீதிமன்றத்தில், தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கக்கோரி இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜனவரி 30 அன்று இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில், ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று (பிப்.2) தேர்தல் ஆணையம் தரப்பில், ‘2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அன்றைய தினம் கையெழுத்தானவை தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்படாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவது எங்கள் பணி இல்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது இன்று (பிப்.3) தீர்ப்பு வர உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, கருநாகராஜன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இதனையடுத்து மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தகவலின் படி அதிமுக இரு அணிகளாக இருப்பதை விரும்பதாக பாஜக தேசிய தலைமை அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் நேற்று முன்தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இபிஎஸ் தரப்பு வேட்பாளரான கே.எஸ்.தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜக விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளோம் என்றும், தேசிய அளவில் பாஜக என்னென்ன செய்துள்ளதை என்பதை அறிவோம் என்று கூறினார். தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பொன்னையன், திமுக நீங்களாக யார் எங்கள் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் என்று பதில் அளித்தார்.

இதையும் படிங்க:இரட்டை இலை முடங்குகிறதா? - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் காரசார பதில்

ABOUT THE AUTHOR

...view details