சென்னை:ஆபாச காணொலி விவகாரத்தில் பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கே.டி. ராகவனைக் கைதுசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் கமலாலயத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, மகளிரணித் தலைவி சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது மிகவும் மோசமான செயல்
போராட்டத்தின்போது பேசிய சுதா ராமகிருஷ்ணன், "மற்றொரு பொள்ளாச்சி சம்பவம் கமலாலயத்தில் நடைபெற்றுவருகிறது. பாஜகவைச் சேர்ந்த பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லை" என்றார். செல்வப்பெருந்தகை பேசுகையில், பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்று குற்றஞ்சுமத்தினார்.
ஜோதிமணி கூறுகையில், "பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அசிங்கமான செயலில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியைச் சேராத வேறு பெண்கள் என்றால் அவர்கள் காலில் விழுந்தாவது இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சித்திருப்பேன் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். இது மிகவும் மோசமான செயல்.
ஒரு முன்னாள் காவல் துறை அலுவலர் இவ்வாறு பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகப் பேசுகிறார். இதனால் அண்ணாமலை உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்றார். இதனைத் தொடர்ந்து தடையை மீறி கொட்டும் மலையில் கமலாலயம் நோக்கி முற்றுகையிடச் சென்ற பெண்களை காவல் துறையினர் தடுத்து கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:நடிகை மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் செப். 9 வரை நீட்டிப்பு