தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

K Annamalai: "ஊழலின் உறைவிடம் திமுக - அண்ணாமலை விமர்சனம் - CAG Statement

ஊழலின் உறைவிடம் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

ஊழலின் உறைவிடம் திமுக - அண்ணாமலை விமர்சனம்
bjp-tn-president-annamalai-statement-against-dmk

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 6:51 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூட்டத்தில் திருடியவன், திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு முன்னால் ஓடுவது போல, ஊழலின் உறைவிடம் திமுகவில் இருந்து கொண்டு, ஊழல் என்று பிறரைக் குறை சொல்வது பொதுமக்களை நகைக்க வைக்கும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்து விட்டார். இன்று ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர், சிஏஜி அறிக்கையால் மத்திய அரசின் ஏழு விதமான ஊழல் அம்பலமாகியிருக்கிறது என்று அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.

சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்று தான் கூறியிருக்கிறதே தவிர, ஊழல், முறைகேடு, மோசடி அல்லது முதல்வர் சொன்ன துவாரகா விரைவு சாலை குறிப்பிட்ட நபர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு என்பது போன்ற வார்த்தைகள் எந்த இடத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு, வடிவமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். 14 வழிச் சாலையில், 8 வழி மேம்பாலமாகவும், 6 வழி விரைவுச் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளதால் செலவினம் அதிகரித்துள்ளது என்பது சிஏஜி அறிக்கையிலேயே இருக்கிறது. எதற்காக இந்த மாறுதல் என்பதுதான் சிஏஜி அறிக்கையின் கேள்வியே தவிர, ஊழலோ, முறைகேடோ நடந்துள்ளது என்று அறிக்கையின் எந்தப் பக்கத்திலும் கூறப்படவில்லை. சாலைகள் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தும் செலவு, குறிப்பிடப்பட்டதை விட, இரண்டரை மடங்கு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால், சாலை அமைக்கும் செலவும் உயர்ந்திருக்கிறது என்பதையும் சிஏஜி அறிக்கையே தெளிவுபடுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், சாலைகள் அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது தாமதமாவதால், சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகிறது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குற்றம் சாட்டினார். சாலை அமைப்பதற்கான மூலப் பொருள்களில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு அரசிடமும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தின் கனிம வளங்கள் கடத்தப்பட்டு, கேரளாவுக்கு அனுப்புவதில் திமுக அமைச்சர்களுக்கே தொடர்பு இருப்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மை. மாநில வளர்ச்சிப் பணிகளுக்கு உதவாமல், கனிம வளங்களைத் திருடிக் கொண்டிருப்பவர்கள் மீது முதலமைச்சர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? சுங்கச் சாவடியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறார் முதலமைச்சர். சுங்கச் சாவடிகளில் எப்படி ஊழல் நடக்கும் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். உலக அளவில், ஊழலுக்கான அடையாளங்களாக விளங்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு, எதிலெல்லாம் ஊழல் செய்ய முடியும் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே, சுங்கச் சாவடியில் என்ன ஊழல் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை.

இதையும் படிங்க:Seeman: தமிழ்நாட்டில் மோடி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் - சீமான்

மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில், தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும், சுங்கச் சாவடிகளிலும் இது போல வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனரா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு என்று கூறுவது, வானத்தைப் பார்த்து எச்சில் உமிழ்வதைப் போல. ஒரே எண்ணில் பலரின் கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால், அதனைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமும் உள்ளது என்பதைக் கூட அறியாமல் துண்டுச் சீட்டைப் படித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர். மத்திய அரசு, ஒரே எண்ணில் பல கணக்குகள் இணைப்பது போன்ற தொழில் நுட்பக் குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, புதிய தொழில் நுட்பத்தை உறுதி செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள போலி கணக்குகளைச் சரி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. அதனைச் செய்யத் தவறிவிட்டு, மத்திய அரசு ஊழல் என்று புரியாமல் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒன்று மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 2G ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஊழல், முறைகேடு, மோசடி, அரசுக்கு இழப்பு என்ற வார்த்தைகள் அனைத்தும் இருந்தது 2G ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையில், ஊழலற்ற மக்களுக்கான நேர்மையான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதை, எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Thirumavalavan: சிறுபான்மையினர் மீது வெறுப்பு அரசியலை விதைக்கிறது பாஜக :திருமாவளவன் குற்றசாட்டு !

ABOUT THE AUTHOR

...view details